அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி
கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு நிறுவனங்கள் மற்றும் துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி
கறிகோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு நிறுவனங்கள் மற்றும் துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடு பட்டிருக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி .
கடந்த சில வாரங்களாக வளர்ப்பு தொகை சம்பந்தமாக வளர்ப்பாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறுவனங்களிடம் வைத்து முதல் கட்ட பேச்சு வார்த்தை நடந்து மேற்கொண்டு இது குறித்து இறுதி முடிவு எட்ட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க மாண்புமிகு கால்நடை துறை அமைச்சர் தலைமையில் 17.11.2020 அன்று தலைமை செயலகத்தில் அனைத்து தரப்பினருடன் விரிவான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது .
இதன் விளைவாக மாண்புமிகு கால்நடைதுறை அமைச்சரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வளர்ப்பாளர்களுக்கு பயனளிக்கும் விதத்தில் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு வளர்ப்பு தொகையாக கிலோவிற்கு ரூ. 6 வழங்குவதாக (இது தற்போது இருந்த ரூ.3.50 ல் இருந்து கூடுதலாக ரூ.2.50 அதிகமாகும்) அறிவிக்க பட்டுள்ளது .
மேலும் மாண்புமிகு கால்நடை துறை அமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின் பேரில் சிறிய பண்ணையாளர்களுக்கு ( 2000 கோழிகளுக்கு மிகாமல் உள்ள பண்ணைகளுக்கு ) கோழி ஒன்றுக்கு ரூ.1 கூடுதல் ஊக்க தொகையாக வழங்கவும் முடிவு செய்து அறிவிக்க பட்டுள்ளது .
இந்த இரண்டு முடிவுகளும் முறையே அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பாக வெளியிட பட்டுள்ளது . (இதன் நகல் கீழே இணைக்க பட்டுள்ளது )
மேலும் நல்லெண்ண அடிப்படையில் இந்த உயர்வு தொகைகள் முன் தேதியிட்டு நவம்பர் 1 முதல் தேதியிலிருந்தே அமுல் படுத்தப்படும் என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர் .
இந்த மகிழ்ச்சியான முடிவுகள் எட்டப்பட்ட நிலையில் வளர்ப்பாளர்கள் எந்த வித தடங்களும் இன்றி தங்கள் கோழி வளர்ப்பு தொழிலை கூடுதல் உத்திரவதமான வருமானத்துடன் செய்யலாம் என்பதை தெரிவித்து கொள்கிறோம் . இதில் சிலர் தங்களை முன்னிறுத்தி கொள்வதற்காக இந்த உடன்பாடு ஏற்கப்பட வில்லை , கோழிகள் இறக்க வேண்டாம் என்கிற ரீதியில் வாட்சாப் மூலம் செய்தி பரப்பி வருவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது .
வளர்ப்பு பண்ணையாளர்கள் இவற்றை பொருட்படுத்த வேண்டாம் என்பதை சொல்லிக்கொள்வதோடு பண்ணைகளில் குஞ்சுகள் இறக்குவதற்கும் , கோழிகளை ஏற்றுவதற்கும் எந்த தடங்கல்கள் ஏற்பட்டாலும் தயங்காது உடனடியாக எங்கள் கவனத்திற்கும் அருகிலுள்ள காவல் நிலையத்திலும் தகவல் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறோம் .
கொரொனா தொற்று காரணமாக முடங்கி கிடந்த நம் தொழில் இப்போது சற்றே முன்னேற துவங்கியிருக்கும் இந்நேரத்தில் உற்பத்தி ஒருங்கிணைப்பாளர்களும் கோழி வளர்ப்பாளர்களும் ஒற்றுமையோடு ஒரு குடும்பமாக இயங்கி பலன் அடைய வேண்டும் . எனவே இது குறித்து எந்த சந்தேகம் இருந்தாலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அணுகி தேவையான தகவல்களையும் உதவிகளையும் பெற்று கொள்ளுமாறு அன்புடன் அறிவுறுத்துகிறோம் .
நிர்வாக உயர் மட்ட குழு.
தமிழக அரசின் செய்தி வெளியிடு
தமிழ்நாட்டிலுள்ள கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள், கறிக்கோழி நிறுவன உரிமையாளர்களால் தங்களுக்கு வழங்கப்படும் வளர்ப்புக் கூலியை உயர்த்துதல், வளர்ப்புக்கூலி கணக்கிடும் முறைகளைச் சீராக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டி தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர்.
மாம்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு. உடுமலை. கே. ராதாகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் தலைமை செயலகத்தில் தமிழ்நாடு கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர் மற்றும் கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர் சங்க பிரதிநிதிகளுடன் 17.11.2020 அன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலாளர் மரு.கே. கோபால், இ,ஆ,ப, கால்நடை பரமரிப்புத்துரை இயக்குநர் திரு.அ.ஞானசேகரன், இ,ஆ,ப,மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்கள், கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு குறைந்தபட்ச வளர்ப்புத்தொகையான ரூ.3.50/- லிருந்து ரூ.6/- ஆக உயர்த்தி வழங்கவும் மற்றும் 2000 – க்கும் குறைவாக கறிக்கோழிகள் வளர்க்கும் சிறுபண்ணையாளர்களுக்கு கோழி ஒன்றுக்கு ரூ.1/- (ரூபாய் ஒன்று) வீதம் கூடுதல் ஊக்கத்தொகையாக வழங்கவும் இருத்தரப்பினராலும் ஒருமனதாக ஒத்துக்கொள்ளப்பட்டது.
கறிக்கோழி வளர்ப்பதற்கான ஒப்பந்தம் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய முறையில் தமிழில் ஒரே மாதிரியாக வடிவமைக்கப்படவும், இருத்தரப்பினரும் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்த பத்திரத்தின் நகல் கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு வழங்கப்படவும், தீர்மானிக்கப்பட்டு கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டது.
கறிக்கோழி பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் குறைந்த விலையில் கிடைக்கப்பெறும் உமி, கடலைபொட்டு, மரத்தூள் போன்றவற்றை கோழிகளின் படுக்கை பொருட்களாக பயன்படுத்திக் கொள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டது.
நிறுவனங்கள் கொடுக்கும் தீவனம் மற்றும் மருந்துகளை தவிர மற்ற பொருட்களை கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்களின் ஒப்புதல் இல்லாமல் பண்ணையில் பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.
கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்கள் தரமான கோழிக்குஞ்சுகள் மற்றும் தீவனங்கள் வழங்க வேண்டும் என்றும், பண்ணையாளர்களின் செயல்திறன் பாதிக்கப்படாமல் இருக்க ஒவ்வொரு தொகுப்பிற்கும் முறையான தொழில்நுட்ப ஆதரவு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
கறிக்கோழி பண்ணை தொழிலில் நிலவி வந்த வளர்ப்புக்கூலி மற்றும் இதர பிரச்சினைகளுக்கு மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்களின் நேரடி நடவடிக்கையின் மூலம் ஏழை., எளிய கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் உரிய பலன் பெறும் வகையில் கறிக்கோழி நிறுவன உரிமையாளர்கள் மற்றும் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடத்தப்பட்டு மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
அப்போது மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள், கறிக்கோழி வளர்ப்புத் தொழில் மென்மேலும் வளர்ச்சிப்பெற்று எல்லா நலமும் வளமும் பெற்று சிறப்படைய வேண்டும் என்று வாழ்த்தினார்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை சென்னை- 9.
Responses